சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வழக்கம். அந்த வகையில் இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் பதிவுக்கு சித்தார்த்தின் பதில் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் பஞ்சாப் சென்ற போது போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து பிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சாய்னா நேவால் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அதில், "எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்புக்கு சமரசம் செய்தால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது.பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சித்தார்த்தின் பதிவு சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் இந்த பதிவு பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி தேசிய மகளிர் ஆணையம் மஹாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. மேலும் அவரின் இந்த பதிவு விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டு டிவிட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய நாகரீகமற்ற நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ள சித்தார்த், 'ஒரு நகைச்சுவை யாருக்கும் புரியவில்லை என்றால் அது சிறந்த நகைச்சுவையே அல்ல, தங்களது ட்வீட்டுக்கு பதிலாக நான் பதிவிட்ட வார்த்தைகள் அதன் விதத்தை நியாயப்படுத்த முடியாது. என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். எப்போதும் நீங்கள் என் சாம்பியன்' என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி என இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''என்னைப்பற்றி டிவிட்டரில் விமர்சித்த சித்தார்த் மன்னிப்பு கேட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இவ்வாறு வசைபாடக்கூடாது. ஆனால் எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. சித்தார்த் கூறியது ஏன் வைரலானது என்று எனக்கே தெரியவில்லை. அதைக்கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளேன். கடவுள் சித்தார்த்தை ஆசிர்வதிக்கட்டும்'' எனத்தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்த சர்ச்சை தொடர்பாக சித்தார்த் மீது சென்னை போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.