Skip to main content

மக்களவை ஒத்திவைப்பு.. மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் கண்ணீர்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

venkaiah naidu

 

பெகாசஸ் விவகாரம், வேளாண் மசோதா, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கிவந்தனர். அமளிகளுக்கிடையே சில சட்டங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டாலும், பலநேரங்களில் நாடளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையே நீடித்தது.

 

இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாளை மறுநாள்வரை (13.08.2021) நடக்க வேண்டிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிவுக்கு வர உள்ளது.

 

ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு ஆலோசித்துவருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற அமளி குறித்து, இன்று கண்ணீர் மல்க பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "நேற்று சில உறுப்பினர்கள் மேஜையில் ஏறி அமர்ந்தனர். சிலர் மேஜையில் ஏறி நின்றனர். இந்த அவையின் அனைத்து புனிதத்தன்மையும் நேற்று அழிக்கப்பட்டுவிட்டது" என கூறினார்.

 

இதற்கிடையே, மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

 

 

சார்ந்த செய்திகள்