நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வட மாநிலங்களில் கலவரம் உச்சத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மன்மோகன் சிங் மாநிலங்களவையில் பேசியதை வீடியோவாக வெளியிட்டுள்ளது பாஜக.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங் பேசுகையில், “பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அகதிகளாக இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு பரந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும். துணைப் பிரதமர் ( அப்போதைய துணைப் பிரதமர் அத்வானி) இதை மனதில் கொண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவார் என்று நம்புகிறேன்” என்று மன்மோகன் சிங் பேசியுள்ளார்.