பொருளாதார மந்தநிலை என்ற ஒரு சொல்லையே மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாதபோது, அதனை எப்படி சரி செய்ய முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.
பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா எழுதிய "பேக்ஸ்டேஜ்" என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மன்மோகன் சிங் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, "பொருளாதார பிரச்சனைகளை நாம் சரியாக அங்கீகரிக்காவிட்டால், அதற்கான சரியான தீர்வை கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகிவிடும். நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை நாம் அடையாளம் காணவில்லை எனில், அதனை தீர்க்க நம்மால் சரியான நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வை கண்டறிய முடியாது. அதுபோல தான் தற்போது உள்ள அரசு பொருளாதார மந்தநிலை என்ற ஒரு சொல்லையே ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கும் போது, அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.