மஹாராஷ்டிரா மாநிலம், பாராமதி, தியோக்கடே நகரை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். அப்போது, இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய திருட்டு கும்பல், ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற திருட்டு கும்பல், தொழலதிபரின் மனைவியை மிரட்டி வீட்டில் இருந்த ரூ.95.30 லட்சம் ரொக்கம், ரூ.11 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்க நகைகள் மற்றும் மூன்று செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
அதன் பின்னர், வீட்டிற்கு திரும்பிய ரியல் எஸ்டேட் அதிபரும், அவருடைய மனைவியும் காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சந்தேகத்தின் பேரில் சச்சின் ஜக்தனே (30), ரவீந்திர போசலே (27) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், அவர்கள் தான் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்று திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில், அவர்களிடம் இருந்து ரூ.60.97 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.76.32 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அந்த இருவரிடமும் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், இந்த திருட்டு செயலில் இவர்கள் மட்டும் இல்லாது இன்னும் 3 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதன் பேரில், பாராமதியைச் சேர்ந்த ரேபா சவான் (32), சதாராவைச் சேர்ந்த நிதின் மோரே (36), துரியோதன் ஜாதவ் (35), ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும் பாராமதி எம்.ஐ.டியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் சதாராவைச் சேர்ந்த ராமசந்திரன் சவான் (43) என்ற ஜோசியர். மேலும், அவர் தான் இந்த திருட்டு செயலுக்கு நாள் பார்த்து குறித்து கொடுத்துள்ளார். அதன்படி ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரம் இருப்பதாக கூறியுள்ளார். அந்த சமயத்தில் அந்த வீட்டிற்கு சென்று திருடினால் யாரிடம் சிக்காமல் திருடி வந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில், தான் அந்த ஐந்து பேரும் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்கு சென்று திருடி தப்பித்துள்ளனர். அதன் பிறகு, இந்த திருட்டு சம்பவம் நல்லபடியாக முடிந்ததால், ஜோசியருக்கு ரூ.8 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என்று தெரியவந்தது. தற்போது, ஜோசியரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.