வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் செயல்படும் பல்வேறு தொண்டு அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுவருகின்றன. இவ்வாறு பெறப்படும் நிதியைக் கொண்டு நாடு முழுவதும் கல்வி, சுகாதாரம், கிராமப்புற முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளை பல்வேறு அமைப்புகள் செய்து வருகின்றன. அதேநேரம், ஒருசில அமைப்புகள், இவ்வாறு கிடைக்கும் நிதியை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து தனியார் அமைப்புகள் நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு தற்போது சில மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற விரும்பும் அமைப்பு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருங் வேண்டும் எனவும், அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூபாய் 15 லட்சத்தை நலத்திட்டங்களுக்காகச் செலவிட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கக்கூடாது எனவும், அதேபோல அரசியல் சார்ந்த செயல்களில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் நிதி உதவியைப் பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.