மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.
இந்த நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரங் சிங் அதிரடி அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பால் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பைரங் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “1961 ஆம் ஆண்டுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்தில் நுழைந்து குடியேறியவர்கள், சாதிகள் மற்றும் சமூகங்களை பொருட்படுத்தாமல் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.