இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளைத் தற்போதே தொடங்கிவிட்டன. கடந்த மாதம் நடைபெற்ற பிரசாந்த் கிஷோர் - சரத் பவார் சந்திப்பு, அதன்பிறகு நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம், அண்மையில் நடைபெற்ற ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ஆகிய அனைத்தும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டே நடைபெறுவதாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதத்திலேயே பாஜக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சோனியா காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்குக் கடிதம் எழுதியிருந்த மம்தா, எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்திக்க ஐந்து நாள் பயணமாக நேற்று (26.07.2021) டெல்லி சென்றார்.
இந்நிலையில் இன்று அவர், காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் ஷர்மா ஆகியோரையும் பிரதமர் மோடியையும் சந்தித்தார். இந்நிலையில் மம்தா, நாளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்திக்கவுள்ளார். பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயலும் மம்தாவும் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரும் சந்திக்கவுள்ளது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும், மம்தா திரிணாமூல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளை சந்திக்கவுள்ளார். மம்தா அண்மையில் திரிணாமூல் காங்கிரஸின் நாடாளுமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.