உத்தர பிரதேசம் மாநிலம் பண்டா மாநிலத்தைச் சேர்ந்தவர் பெண் சிவில் நீதிபதி. இவர் பாரபங்கி பகுதி நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி வகித்த போது, தான் சக நீதிபதியால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய அந்த கடிதத்தில், “பாரபங்கி என்ற பகுதியின் நீதிபதியாக எனக்கு பணி வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக, மாவட்ட நீதிபதி என்னை இரவு சந்திக்குமாறு வர சொன்னார். அப்போது மிகவும் கீழ்த்தரமான முறையில் என்னை நடத்தினார். பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுத்தார். குப்பை தொட்டியை விட, ஒரு பூச்சியை விட கேவலமாக நான் நடத்தப்பட்டேன். இதனால், நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.
இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட் மேலிடத்திற்கு கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தேன். ஆனால், இது அலட்சியப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக போலியான நடவடிக்கை எடுப்பதாக நான் உணர்கிறேன். மேலும், இது தொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவரை மாவட்ட நீதிபதியில் இருந்து மாற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், எனக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காது. எனக்கு இனியும் வாழ விருப்பமில்லை.
இந்த ஒன்றரை வருடங்களில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன். இந்த ஆன்மாவும், உயிரும் இல்லாத உடலைச் சுமந்து செல்வதில் எனக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். என் வாழ்க்கையில் கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும். தற்கொலை செய்ய அனுமதி தாருங்கள்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பெண் நீதிபதியின் பாலியல் புகாரின் நிலை குறித்து அலகாபாத் உயர்நீதிமன்ற நிர்வாகத்திடம் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிக்கை கேட்டுள்ளார்.