மேற்குவங்கத்தில் அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'மாணவர் கிரெடிட் கார்டு' திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். பணமில்லாத காரணத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கீழ் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளை கொண்டு மாணவர்கள் 10 லட்சம் வரை தங்களது கல்விக்காகச் செலவு செய்து கொள்ளலாம். அதாவது இந்த கிரெடிட் கார்டினை கொண்டு மாணவர்கள், இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ இளங்கலை, முதுகலை, முனைவர் மற்றும் இதர படிப்புகளுக்குப் பணம் செலுத்திச் சேரலாம். மேலும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் சேருவதற்கும், குடிமையியல் பணி (சிவில் சர்விஸ்) உட்படப் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேரவும் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் எனவும், விடுதி வாடகை செலுத்துவதற்கும், லேப்டாப் போன்றவற்றை வாங்கவும், கல்விச் சுற்றுலா செல்லவும் இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 10 ஆண்டுகளாக வசிக்கும், 40 வயதிற்கு உட்பட்டோர் கல்வி தேவைக்காக இந்த கிரெடிட் கார்டை பெறலாம். வருடாந்திர எளிய வட்டியுடன் வழங்கப்படும் இந்த கடனை, திரும்பச் செலுத்த மாணவர்களுக்கு 15 ஆண்டுகள் அவகாசமும் அளிக்கப்படும். மம்தா கொண்டுவந்துள்ள இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.