என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் எனது தலைமுடியைக் கூடத் தொட முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து அவர், கடந்த 16 ஆம் தேதி மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காகத் தான் இருந்திருக்கிறது.
இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்வி கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2 ஆம் தேதி மொய்த்ராவை நேரில் வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் தனது செல்போன் மற்றும் மின்னஞ்சலை ஹேக் செய்ய முயற்சி செய்து வருகிறது என்று நேற்று (31-10-23) மஹுவா மொய்த்ரா குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மொய்த்ரா, “அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது அரசு நடத்தும் தாக்குதல் என்றே கருத முடியும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது நாடாளுமன்ற சபாநாயகர் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்னை மட்டுமே குறிவைத்து சதி நடக்கிறது. எனக்கு எதிரான நடத்தப்படும் சதியை நான் தவிடுபொடியாக்குவேன். என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றவும், சஸ்பெண்ட் செய்யவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்களால் எனது தலைமுடியைக் கூடத் தொட முடியாது” என்று கூறினார்.