Skip to main content

சாவர்க்கரை மன்னிப்பு கேட்க சொன்னது மகாத்மா காந்திதான் - மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

rajnath sing savarkar

 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று (12.10.2021) சாவர்க்கர் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்கச் சொன்னதே மகாத்மா காந்திதான் என தெரிவித்துள்ளார்.

 

புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் பேசியதாவது,

 

“சாவர்க்கர் இந்திய வரலாற்றின் அடையாளமாக இருந்தார். தொடர்ந்து அடையாளமாக இருப்பார். அவரைப் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவரை தாழ்ந்தவராக பார்ப்பது ஏற்புடையதும் நியாயமானதும் அல்ல. அவர் சுதந்திர போராட்ட வீரர், மேலும் தீவிர தேசியவாதி. ஆனால் மார்க்சிஸ்ட் மற்றும் லெனினிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் மக்கள் சாவர்க்கர் ஒரு ஃபாசிஸ்ட் என்று குற்றம் சாட்டுகிறார்கள். சாவர்க்கர் மீதான வெறுப்பு நியாயமற்றது.

 

udanpirape

 

சாவர்க்கரைப் பற்றிய பொய்கள் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகின்றன. சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் பல கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று  பரப்பப்படுகிறது. மகாத்மா காந்திதான் அவரை கருணை மனுக்களைத் தாக்கல் செய்யுமாறு கூறினார். சாவர்க்கர் 20ஆம் நூற்றாண்டில், இந்தியாவின் முதல் இராணுவ மூலோபாய விவகார நிபுணர் ஆவார். அவர் நாட்டிற்கு வலுவான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர கோட்பாட்டை வழங்கினார். அவருக்கு இந்து என்பது எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. அது அவருக்குப் புவியியல் மற்றும் அரசியல் அடையாளத்துடன் தொடர்புடையது. சாவர்க்கருக்கு இந்துத்துவா என்பது கலாச்சார தேசியத்துடன் தொடர்புடையது.

 

சாவர்க்கரை பொறுத்தவரை, தனது குடிமக்களை அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பிரிக்காததே சிறந்த அரசாகும். எனவே அவரது இந்துத்துவாவை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.”


இவ்வாறு ராஜ்நாத் சிங் உரையாற்றினார். 

 

 

சார்ந்த செய்திகள்