கடந்த 15 ஆண்டுகளாக சம்பளம் வழங்கவில்லை என்பதால் மனவேதனையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் கோன்டியா மாவட்டத்தில் ஆதிவாசி ஜூனியர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைக்காமல் இந்த பள்ளி நடந்து வந்துள்ளது.
இதில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தவர் கேசவ் கோபடே. கடந்த 15 வருடங்களாக இவருக்கு சம்பளம் என எதுவும் வழங்கப்படாத நிலையில், மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து அப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 15 ஆண்டுகளாக சம்பளம் என எதுவும் வாங்காத நிலையில், இதனால் ஏற்பட்ட சண்டை காரணமாக இவரது மனைவி மற்றும் குழந்தை இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் அரசு மானியமோ, சம்பளமோ இனியும் கிடைக்காது என்று கருதிய அவர் சுதந்திர தினத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தில் சம்பளம் பெறாமல் வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்களிடம் அரசுக்கு எதிராக கோபத்தை தூண்டியுள்ளது.