இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிற்குள்ளேயே தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு, தடுப்பூசி தயாரிக்க சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தது.
இந்தநிலையில், தற்போது மஹாராஷ்ட்ரா அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹாஃப்கின் பயோ-ஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியும் அளிக்கவுள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், "கோவாக்சின் தடுப்பூசிக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளோம். அடுத்தகட்ட நடைமுறைகளுக்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். எட்டு மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம். வருடத்திற்கு 22.8 கோடி தடுப்பூசிகளைத் தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். மத்திய அரசு எங்களுக்கு 65 கோடி நிதியுதவி அளிக்கிறது. மஹாராஷ்ட்ரா அரசு எங்களுக்கு 93 கோடிக்கு மேல் நிதியுதவி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.