கண்ணுக்குத்தெரியாத கரோனா வைரஸ் தொற்று மனித இனத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட, பொருளாதாரத்தில் முன்னேறிய அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களி்ன் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ள நிலையில், இன்று மேலும் 778 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,427 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பால் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை 840 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.