உலகம் முழுவதுமுள்ள இந்து மக்களால் இன்று (15.10.2021) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், விஜயதசமியையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பிலும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேலிய துணை தூதரகத்தின் ஜெனெரல் கலந்துகொண்டார்.
இந்த விஜயதசமி நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் மோகன் பகவத், நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். விஜயதசமி விழாவை முன்னிட்டு மோகன் மோகன் பகவத் பேசியது வருமாறு,
“பிரிவை அதிகமாக்கும் கலாச்சாரத்தை நாங்கள் விரும்பவில்லை. தேசத்தை ஒன்றிணைத்து அன்பை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தையே நாம் விரும்புகிறோம். எனவே பிறந்தநாள், பண்டிகைகள் போன்ற சிறப்பான சந்தர்ப்பங்கள் ஒன்றாக கொண்டாடப்பட வேண்டும். இந்தியா முன்னேறுவதாலும், மரியாதையான நிலைக்கு உயர்வதாலும் உலகில் உள்ள சில சக்திகளின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.
இந்தியாவின் பாரம்பரியங்கள், மதம், தற்போதைய வரலாறு ஆகியவற்றை நிந்திக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நாடு பிரிக்கப்பட்டது ஒரு சோகமான வரலாறு. அந்த வரலாற்றின் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்த ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் மீண்டும் கொண்டு வர, புதிய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
ஓடிடி தளங்களில் என்ன காண்பிக்கப்படுகிறது என்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கரோனாவிற்குப் பிறகு குழந்தைகளிடம் கூட தொலைபேசிகள் உள்ளன. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவருகிறது. அதை எப்படி தடுப்பது? இத்தகைய வணிகங்களின் மூலமாக கிடைக்கும் பணம், தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் தொகை கொள்கை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கப்பட வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை சமமாக செயல்படுத்தப்பட வேண்டும், மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு ஒரு பிரச்சனையாகிவிட்டது.
தலிபான்களின் வரலாறு நமக்குத் தெரியும். சீனாவும் பாகிஸ்தானும் இன்றுவரை தலிபான்களை ஆதரிக்கின்றன. தலிபான்கள் மாறினாலும், பாகிஸ்தான் மாறவில்லை. இந்தியா தொடர்பான சீனாவின் நோக்கங்கள் மாறிவிட்டனவா? நமது எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.”
இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.