ஹைதராபாத்தின் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து ஹைதராபாத் கடைசி நிஜாமான மிர் ஒஸ்மான் அலிகான் பயன்படுத்திய, தங்கத்தாலானதும் வைரங்கள், மாணிக்கம் உள்ளிட்ட அருங்கற்கள் பதிக்கப்பட்டதுமான டிபன் பாக்ஸ், சாஸருடன் கூடிய தேநீர்க் கோப்பை, கரண்டி ஆகியவை திருடுபோயுள்ளன.
விலைமதிப்பும் கலைச்சிறப்பும் மிக்க கலைப்பொருட்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானதாகும். ஆனால், அத்தகைய கலைப்பொருட்கள் தகுந்த பாதுகாப்பின்றி அலட்சியப்படுத்தப்பட்டு, அயல்நாடுகளுக்கு கடத்தப்படும் நிகழ்வுகள் அதிகளவில் நடக்கும் நாடும் இந்தியாதான்.
இந்தத் திருட்டு ஞாயிறன்று இரவு நடந்திருக்கலாமென யூகிக்கப்படுகிறது. திங்களன்று காலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டபின், அருங்காட்சிய ஊழியரால் பொருட்கள் திருடுபோனது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தின் முதல் தளத்திலுள்ள மூன்றாவது காட்சிக்கூடத்தில் இந்தப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
திருடியவர்கள் கயிறின் துணையுடன் முதல் தளத்திலுள்ள மரத்தாலான வென்டிலெட்டர் வழியாக உள்ளே நுழைந்து திருடியிருக்கிறார்கள். மேலும் பாதுகாப்புக்கென வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் தங்கள் அடையாளம் பதிவாகாதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.
இதனால், அருங்காட்சியகத்தை நன்கறிந்தவர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கவேண்டுமென போலீஸார் கருதுகின்றனர். திருடுபோன பொருட்களின் விலை திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், சர்வதேச சந்தையில் 50 கோடி விலைபோகுமென கலைப்பொருட்களின் மதிப்பறிந்தவர்கள் கூறுகிறார்கள்.