கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு துணைத் தலைவர் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்துப் பேசினார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டாவது நாளாக நேற்றும் நடைபெற்றது. நேற்று மக்களவையில் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் விவாதத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நேற்று பதிலளித்துப் பேசினர்.
இதையடுத்து மூன்றாவது நாளாக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்துப் பேசி வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி.க்கள் மதுரை எய்ம்ஸ் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலளித்துப் பேசுகையில், “மதுரையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து 77 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆயிரத்து 627 கோடி ரூபாய்க்கான கடன் ஜெய்காவில் இருந்து எடுத்து மத்திய அரசின் செலவில் கட்டப்படுகிறது. மத்திய அரசு இந்தக் கடனைத் தீர்த்து வைக்கும். இதன் மூலம் தமிழக அரசுக்கு எந்தக் கடனும் இல்லை. மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 740 படுக்கைகள் தான் இருக்கும், ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக இருக்கும் 150 படுக்கைகளும் தொற்று நோய் வராமல் இருப்பதற்கான தடுப்பு பிரிவாக செயல்படும் ” எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசும் போது திமுக உறுப்பினர்கள் வெட்கம் வெட்கம் என முழக்கம் எழுப்பினர்.