மத்தியப்பிரசதேசத்தில் நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்களின் உச்சமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 193 சட்டமன்ற உறுப்பினர்கள் கூர்கான் மற்றும் ராஜஸ்தானில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களது ஆட்சியைக் கலைக்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மேலும், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும் தொகையைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தருவதாகப் பேரம் பேசி வருவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகினார். அவருக்கு ஆதரவாக 22 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை மாநில பாஜக தலைமை தங்களது 107 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. அதன்பின் 101 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, அரியானாவின் கூர்கான் நகரில் உள்ள ஐ.டி.சி. நட்சத்திர விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல நேற்று காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமும் நடைபெற்றது. அதன்பின் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 92 பேர் இன்று ராஜஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.