மத்தியப் பிரதேச மாநிலம் ஷதோல் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண் டி.ஐ.ஜி சவிதா சோகனே கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “பூமியில் நீங்கள் உதிய தலைமுறையை உருவாக்குவீர்கள். அதை எப்படி செய்வீர்கள்? அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். நான் சொல்வதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பௌர்ணமி நாள் இரவில் கருத்தரிக்கக்கூடாது. அழகான குழந்தைகளை பெறுவதற்குச் சூரியனைக் கும்பிட்டு தண்ணீர் வழங்கி வணக்கம் செலுத்த வேண்டும்” என்றார். இது தொடர்பான வீடியோ, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வரலானதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேசு பொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து விளக்கமளித்த டி.ஐ.ஜி சவிதா சோகனே, “நான் ஒவ்வொரு மாதமும் இது போன்று ஒரு பள்ளியில் உரை நிகழ்த்தி வருகிறேன். வேதங்களில் படித்ததும், ஆன்மிக தலைவர்களின் சொற்பொழிவுகளில் கேட்டதையும் தான் கூறி வருகிறேன். இந்து மதத்தில் பௌர்ணமி புனிதமான காலம் என்பதால் அப்போது கருத்தரிக்கக் கூடாது என்று தெரிவித்தேன்” என்றார். தற்போது இதுவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனைத்து மதத்தவரும் படிக்கும் பள்ளியில், ஒரு மதம் சார்ந்த விஷங்களை பற்றிக் குறிப்பிடுவது வேற்றுமையை உருவாக்கும் என்றும், அதுமட்டுமில்லாமல் படிக்கும் மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத விஷயங்களை விதைக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டித்தது வருகின்றனர்.