நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா தொகுதியில், ஏற்கெனவே இரண்டு முறை எம்.பி.யாக வெற்றி பெற்ற நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமமாலினி, இந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியில், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த தொகுதியில் எம்.பி. ஹேமமாலினி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் மதுரா தொகுதியில் ஹேமமாலினி போட்டியிடுவதை, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜேவாலா விமர்சனம் செய்திருந்தார். அப்போது அவர், ஹேமமாலினி குறித்து பேசியது, தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க வெளியிட்டிருந்த வீடியோவில் பேசும் சுர்ஜேவாலா, ‘தங்கள் குரலை அந்த மக்கள் பிரதிநிதிகள் எதிரொலிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வு செய்கிறார்கள். ஆனால் ஹேமமாலினியோ...’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பா.ஜ.க, ‘ஹேமமாலினிக்கு எதிராக சுர்ஜேவாலா பேசியது ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பேசிய ஹேமமாலினி, “காங்கிரஸ், பிரபலமானவர்களையே குறி வைக்கிறது. ஏனென்றால், பிரபலமற்றவர்களை குறிவைத்து பேசினால், அவர்களுக்கு எந்த பயனும் இருக்காது என்ற காரணத்தினால் தான். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதனையடுத்து, ஹேமமாலினி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் சுர்ஜேவாலாவை கண்டிக்கும் விதமாக தேர்தல் ஆணையம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘மேற்கூறிய கருத்துக்கள் கண்ணியமற்றவை, கொச்சையானவை, நாகரீகமற்றவை என்பதை சொல்லத் தேவையில்லை. அத்துடன் ஹேமமாலினிக்கு பெரும் அவமானத்தையும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அரசியல் அமைப்புகளில், பொது வாழ்வில் உள்ள பெண்கள் மற்றும் பொதுவாக அனைத்துப் பெண்களின் கெளரவம் மற்றும் கண்ணியத்துக்கும் கேடு விளைவிக்கிறது. தேர்தல் ஆணையம், உங்கள் மட்டத்தில் கட்சியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதிலும், இந்திய தேசிய காங்கிரஸின் பிரச்சாரக்காரர்கள், இன்னும் பெண்களின் கௌரவம் மற்றும் கண்ணியத்தை அவமதிக்கும் வார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது’ என்று நோட்டீஸ் அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.