புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
"புதுச்சேரியில் வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர்களால் நாளுக்குநாள் தொற்று அதிகரிப்பதை அடுத்து இன்று முதல் அனைத்து கடைகளும் இரண்டு மணிவரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தற்போது வழங்கப்பட்டது போல் மத்திய அரசு கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் இலவச அரிசியை வழங்க வேண்டும். கரோனா பணிகளை சமாளிக்க மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி வழங்க வேண்டும். மேலும் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்வது பொதுமக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு இதனை உடனே குறைக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளேன்.
மூன்று மாதங்களுக்கு தேவைக்கேற்ப செவிலியர், ஆஷா பணியாளர்களை நியமிக்க சுகாதார துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சம்பளம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும். லடாக் எல்லையில் சீன ராணுவம் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்களை தாக்கி உள்ளதா என மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்" இவ்வாறு அந்த வீடியோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.