திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியரான ஸ்டேன் சுவாமி, மனித உரிமை ஆர்வலராக செயலாற்றிவந்தவர். ஜார்கண்டில் பழங்குடியினருக்காக ஐந்து தசாப்தங்களாக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இவர்மீது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பிருப்பதாகவும், தடைசெய்யபட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு கைது செய்தது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டமும் (உபா) பாய்ந்தது.
ஏற்கனவே பார்கின்சன் நோயால் அவதிப்பட்டுவந்த ஸ்டேன் சுவாமிக்கு, சிறையில் கரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் நேற்று (04.07.2021) அவரது உடல்நிலை மேலும் மோசமானது.
இதனையடுத்து இன்று காலை அவருக்கு அவசரமாக பெயில் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மதியம் விசாரணைக்கு வந்தபோது ஸ்டேன் சுவாமி மதியம் 1:24 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஸ்டேன் சுவாமிக்கு 84 வயது என்பது குறிப்பிடத்தக்கது.