வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பெண் பொறியாளர் ஒருவர் வீட்டில் நடத்திய சோதனையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களால் லோக் ஆயுக்தா போலீசாரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச காவல்துறையின் வீட்டு வசதி வாரியத்தில் ஒப்பந்த உதவி பொறியாளராக 2011 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் ஹேமா மீனா (வயது 34). இவரின் மாதச் சம்பளம் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இவர் மீது கடந்த 2020 ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த புகார் மீது கடந்த வியாழக்கிழமை அவருக்கு சொந்தமான இடங்களில் மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
போபால் அருகே உள்ள பில்கிரியா என்ற இடத்தில் தனது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 20 ஆயிரம் சதுர அடி இடத்தில் கட்டப்பட்ட 40 அறைகள் கொண்ட பங்களாவில் ஹேமா மீனா வசித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 1 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பங்களாவில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அந்த பங்களா முழுவதும் ஆடம்பர பொருட்கள் நிறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது அறையில் இருந்து 30 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஒன்று மீட்கப்பட்டது. இது தவிர பங்களாவில் இருந்து இரண்டு லாரிகள் மற்றும் பல்வேறு சொகுசு வாகனங்களும் மீட்கப்பட்டன.
மேலும் ஹேமா மீனாவின் பண்ணை வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள அரசு உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மதிப்புள்ள விவசாய உபகரணங்கள், விலை உயர்ந்த மதுபாட்டில்கள், சிகரெட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர அவரது பண்ணை வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பிட்புல், டாபர்மேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இன நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது மட்டுமின்றி பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 60 மாடுகளும் அங்கிருந்து மீட்கப்பட்டன. இந்த சோதனையில் அவரது வீட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ரொட்டி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரமானது நாய்களுக்கு உணவளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இது மட்டுமின்றி இவரது பண்ணை வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான பால் பண்ணை ஒன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் இந்த ஆடம்பர வாழ்க்கை நிலையைக் கண்டு மத்தியப் பிரதேச லோக் ஆயுக்தா போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சோதனையானது மத்தியப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.