மத்தியப் பிரதேச அமைச்சரவை, கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில், 'மதச் சுதந்திர மசோதா 2020'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த மசோதா, வருகின்ற குளிர்கால கூட்டத்தொடரில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச அரசின் இந்தப் புதிய சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்துதல், மிரட்டுதல், சதிச் செயல்கள் ஆகியவற்றின் மூலம் ஒருவரை மதம் மாற்றுவது மற்றும் திருமணத்திற்காக ஒருவரை மதம் மாற்றுவது ஆகியவற்றிற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், மதம் மாற விரும்புபவர்கள் இரண்டு மாதத்திற்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்காக மதம் மாறுவது தடை செய்யப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் 'லவ் ஜிகாத்' சட்டம் என அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநில அரசின் சட்டத்தைப் போல், இந்தச் சட்டமும் திருமணத்திற்காக மதம் மாறுவதைத் தடை செய்வதால், இந்தச் சட்டமும் 'லவ் ஜிகாத்' சட்டம் என்றே அழைக்கப்படுகிறது.