கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் உரையாடினார் துணை முதல்வர் சிவக்குமார். அப்போது, “காவல்துறையினரை காவி உடை அணிய அனுமதித்ததன் மூலம் ஆட்சி நிர்வாகம் எவ்வாறு சங்கடத்திற்கு உள்ளானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். திப்பு சுல்தான் கொல்லப்பட்டது போல் சித்தராமையாவைக் கொல்லத் தூண்டியவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை? நீங்கள் மாற வேண்டும். உங்கள் அணுகுமுறை மாற வேண்டும். இல்லையெனில், உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும்.
நமது ஆட்சியில் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த அரசிடம் இருந்து பெரிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர். அதனை காவல்துறையிலிருந்து தொடங்க வேண்டும். கர்நாடக காவல்துறைக்கு நாடு முழுவதும் நல்ல பெயர் இருந்தது. அந்த மானத்தையும் கண்ணியத்தையும் கெடுத்துவிட்டீர்கள்.
காவல்துறையை காவி மயமாக்கப் போகிறீர்களா? இதற்கு நமது ஆட்சியில் அனுமதி இல்லை. மங்களூரு, பிஜாப்பூர், பாகல்கோட்டில் காவி உடை அணிந்து துறையை எப்படி அவமதித்தீர்கள்? நாட்டின் மீது மரியாதை இருந்தால், தேசியக் கொடியுடன் பணியாற்ற வேண்டும். எங்கள் ஆட்சியில் காவல்துறையை காவி மயமாக்க அனுமதிக்கமாட்டோம்” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் சிவக்குமார்.
கடந்த பாஜக ஆட்சியில் காவல்துறை எப்படி நடந்துகொண்டது என்பதை நினைவுபடுத்தி காவல்துறை அதிகாரிகளுக்கு வகுப்பு எடுத்துள்ள துணை முதல்வர் சிவக்குமாரின் எச்சரிக்கை கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.