- தெ.சு.கவுதமன்
50 நாட்களில் 50 ஆயிரம் கோடியை இழந்துவிட்டு விழி பிதுங்கி நிற்கிறது எல்.ஐ.சி. நிறுவனம். அப்படியெல்லாம் இல்லை நாங்கள் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது வெறும் 1% தொகையைத்தான். இதனாலெல்லாம் எங்களுக்கு பெரிய இழப்பு இல்லை என்றெல்லாம் எல்.ஐ.சி. தரப்பில் விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. இதுவரை எல்.ஐ.சி. இதுபோன்ற விளக்கமெல்லாம் அளிக்குமளவிற்கு தள்ளப்பட்டதில்லை. ஆனால், மோசமானதொரு நிறுவனத்தில் கண்மூடித்தனமாக பொதுமக்களின் பணத்தை முதலீடு செய்துள்ளதால் நாடு முழுக்க எல்.ஐ.சி. நோக்கி கேள்விகள் எழுகின்றன.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஸன், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏ.சி.சி என அதானி குழுமத்தைச் சேர்ந்த ஏழு நிறுவனங்களில் எல்.ஐ.சி. நிறுவனம் சுமார் 83 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள நிலையில், ஹிண்டர்பர்க் நிறுவன அறிக்கையால் அதானி குழுமத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் சரிவால், அதன் பங்காளியாகிய எல்.ஐ.சி. நிறுவனமும் அடி வாங்கி, கடந்த 50 நாட்களில் சுமார் 50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி வியாழனன்று அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. நிறுவன முதலீட்டின் மதிப்பு சுமார் 33 ஆயிரம் கோடிகளாகச் சரிவடைந்தது.
இதையடுத்து எல்.ஐ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ‘எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பான 41.66 லட்சம் கோடியில் அதானி குழுமத்தில் செய்யப்பட்ட மொத்த முதலீடு 0.975% மட்டுமே. எனவே அந்நிறுவனத்தின் பங்குகளில் ஏற்படும் சரிவு எல்.ஐ.சி. நிறுவனத்தைப் பெரிதும் பாதிக்க வாய்ப்பில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தை ஏற்கெனவே தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள புதுக்குழப்பம் எல்.ஐ.சி.யின் எதிர்காலத்தை எப்படி பாதிக்குமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜிடம் கேட்டபோது, "ஒரு நிறுவனத்தை தனியார் வசமாக்கினால் அனைத்தும் நன்றாகச் செயல்படும் என்பதெல்லாம் உண்மையல்ல. எல்.ஐ.சி. ஏற்கெனவே தனியாரிடம் தான் இருந்தது. தனியார் நிறுவனங்களெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்று குற்றம் சொல்லித்தான் அரசு தன் வசம் எடுத்தது. எனவே எல்.ஐ.சி நிறுவனம் மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் 100% வரிகளை முழுமையாகச் செலுத்துவார்கள். இங்கே வரி ஏய்ப்பு இருக்காது. ஆனால் தனியார் நிறுவனங்களில் அப்படியில்லை. அதானி உலகின் இரண்டாவது பணக்காரராக ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்தபோதும் இந்தியாவுக்கு அதிக வரி செலுத்துபவர்களில் முதல் பத்து இடங்களில்கூட அதானி நிறுவனம் இல்லை. கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வரியாகவும் டிவிடன்டாகவும் அரசாங்கத்துக்கு 97 ஆயிரம் கோடியை வழங்கியிருக்கிறது. இதுபோல் எந்த தனியார் நிறுவனமும் வரி செலுத்தியது கிடையாது.
ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனை 15 ஆயிரம் கோடிகளுக்கு டாடா நிறுவனத்துக்கு கைமாற்றினார்கள். இந்த தொகையை டாடா நிறுவனம் எப்படிச் செலுத்தியது? வங்கிகள் மூலமாக அரசாங்கத்திடமிருந்து தான் செலுத்தியது. இப்படி பெறப்பட்ட நிறுவனம் சரியானபடி வருமானத்தை ஈட்டவில்லையென்றால் வங்கிக் கடன்கள் வாராக்கடன்களாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். ஆக, தனியார் மயமாக்கலில் இப்படியான குழப்பங்கள் தான் நடக்கின்றன.
1934 ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் செக்சன் 34 என்ன சொல்கிறதென்றால் பெருமுதலாளிகள் கடன் வாங்கினால் எவ்வளவு வாங்கினார்கள் என்று வெளியிடக்கூடாதென்று கூறுகின்றது. இதுவே பொதுமக்கள் ஒரு பத்தாயிரம் ரூபாய் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் ஊர் முழுக்க அச்செய்தியைப் பரப்புகிறார்கள். ஆக, இப்படியான விதிமுறைகளை மாற்ற வேண்டும். அதேபோல, சாமானிய மனிதர்கள் 1000 ரூபாயை வங்கிக்கடன் பெறுவதென்றால் 1100 ரூபாய்க்கு அடமானம் கொடுத்தாக வேண்டும். அதுவே பெருமுதலாளிகளுக்கு 10 ஆயிரம் கோடி கடன் பெற்றால் அதற்காக 1000 கோடி மட்டுமே அடமானம் வைத்தால் போதுமென்கிறது சட்டம்.
6 விமான நிலையங்களையும் அதானி நிறுவனத்தின் பொறுப்புக்கே விட்டபோது நிதி ஆயோக் அதனை ஏற்கவில்லை. இது சரியான உத்தியாக இருக்காது என்று கூறியது. அதேபோல், இவர்களுடைய கடன்கள் மற்றும் சொத்து மதிப்பை கணக்கிடும்போது, அதானி நிறுவனத்தால் இவற்றை நடத்துவது இயலாதென்பதால் இரண்டு விமான நிலையங்களுக்கு மேல் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாமென நிதி அமைச்சகமும் மறுத்தது. இதையெல்லாம் மீறி, அதானி நிறுவனத்துக்கே வழங்கப்பட்டதில் மோடி, அமித்ஷாவின் அழுத்தங்கள் இருக்கக்கூடும். இப்படியாக இந்தியாவின் பொதுச் சொத்துக்களை முறைகேடாக வெகுவேகமாக தனியார்மயமாக்குவது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல" என்றார்.