இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யத் தடுப்பூசியான ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் பெரு நகரங்களில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ஸ்புட்னிக் v தடுப்பூசி தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்புட்னிக் v தடுப்பூசி விரைவில் அரசு தடுப்பூசி மையங்களிலும் செலுத்தப்படும் என மத்திய அரசின் கரோனா பணிக்குழு தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "தற்போது ஸ்புட்னிக் v தடுப்பூசி தனியாரிடம் மட்டுமே கிடைக்கிறது. தடுப்பூசியின் வரத்து அளவை பொறுத்து, அதனை விரைவில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும், ஸ்புட்னிக் v தடுப்பூசியை இருப்பு வைக்க -18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும் எனத் தெரிவித்துள்ள என்.கே.அரோரா, போலியோ தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படும் குளிர் சங்கிலி வசதிகள் மூலம் ஸ்புட்னிக் v பாதுகாக்கப்படும் எனவும், கிராமங்கள் வரை ஸ்புட்னிக் v தடுப்பூசி கொண்டுசெல்லப்படும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், "கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் உற்பத்தியை அதிகரிப்பதைத் தவிர, ஸ்புட்னிக் வி, மாடர்னா மற்றும் ஜைடஸ் காடிலாவின் புதிய மருந்துகளை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மூலம் தினசரி தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 50 லட்சத்திலிருந்து 80 லட்சமாக உயர்த்தலாம். எதிர்காலத்தில் இதன் அளவு வாரத்திற்கு ஒரு கோடியாகவும் அதிகரிக்கும்" என என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.