ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 14 மாதங்களில் ரூபாய் 35,000 கோடி கடனை திருப்பி செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் அச்சத்தை போக்கும் விதமாக அனில் அம்பானி இத்தகைய செய்தியை வெளியிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு ஏப்ரல்- 1 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மே- 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூபாய் 24,800 அசலையும், ரூபாய் 10,600 கோடி வட்டியையும் தங்கள் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
பல்வேறு வங்கிகள் தங்கள் நிறுவனத்திற்கு கடன் வழங்க மறுப்பு தெரிவித்த நிலையிலும் கூட கடன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருப்பி செலுத்தியுள்ளதாக கூறினார். ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீது கடந்த சில வாரங்களாக தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். அதே போல் ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் பவர் ஆகிய நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்திவிட்டோம். எதிர்காலத்தில் தங்கள் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகைகளை நிச்சயம் திருப்பி செலுத்துவோம் என்றார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய நிலுவை தொகை ரூபாய் 30,000 கோடி நீதிமன்றங்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் உள்ளிட்ட வழக்குக்களால் காலதாமதமானது. இந்த தொகை ஏறக்குறைய 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது தான் கிடைத்துள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.