தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (04/12/2021) காலமானார்.
வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி ஐதராபாத் இல்லத்தில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், அவரின் உடல்நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று காலை 08.20 மணிக்கு உயிர் பிரிந்தது.
ரோசய்யா மறைவுக்குப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா குறித்து விரிவாகப் பார்ப்போம்!
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுரு கிராமத்தில் கடந்த 1933ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் தேதி பிறந்தவர் ரோசய்யா. வணிகவியல் பட்டப்படிப்பை முடித்ததும், காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், கட்சிப் பணிக்காகத் தீவிரமாகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, 1968, 1974 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் ஆந்திர சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், மாநில அமைச்சராகப் பதவி வகித்த ரோசய்யா, 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஆந்திர மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.