Skip to main content

சினிமாவை மிஞ்சிய சம்பவம்; ஸ்கெட் போட்ட கூலிப்படை; தட்டித்தூக்கிய இணை ஆணையர்!

Published on 17/03/2025 | Edited on 17/03/2025

 

Joint Commissioner Sibi Chakravarthy caught gang that was trying commit kidnappin

சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையான ஜுவல்லரிஸின் உரிமையாளர் மகனை கடத்தி கொலை செய்ய அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று திட்டம் தீட்டியுள்ளது.  இதனை அரங்கேற்ற தென் மாவட்டமான தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு கூலிப்படை குழு களமிறக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடத்தல், கொலை சம்பவங்களை அரங்கேற்றச் சென்னையில் கூலிப்படை ஒன்று இறங்கியுள்ளது என்ற ரகசியத் தகவல் மாநகர போலீஷ் கமிஷ்னர் அருணின் காதுகளுக்கு சென்றுள்ளது. வேளச்சேரி பகுதி மாநகர  காவல்துறை தெற்கு இனையாணையர் சிபி சக்கரவர்த்தியின் கீழ் வருவதால் உடனடியாக அவருக்குத் தகவல் தெரியப்படுத்தியதுடன், தனக்குக் கிடைத்த புகைப்படங்களையும் அனுப்பி உஷார் படுத்தியுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கூலிப்படையினரை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி கவனமாக கண்காணித்து வந்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கூலிப்படையினர், சம்பவத்தை அரங்கேற்ற வேளச்சேரியை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். அதேசமயம், இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தன்னுடன் பணிபுரியும் துணை ஆணையர்  சீனிவாசனோடு சேர்ந்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.அந்த பகுதி முழுவதும் சுமார் இரண்டு மணி நேரம் வாகன சோதனை நடைபெற்றது. 

அப்போது கடத்தல், கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கூலிப்படை குழுவைச் சேர்ந்த சுரேஷ், முருகன், பாலமுருகன், வினோத், சச்சின், ஆகியோரை அடையாளம் கண்டு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி மற்றும் துணை ஆணையர் சீனிவாசன் இருவரும் மடக்கி பிடித்தனர். அப்போது சுதாரித்துக்கொண்ட இருவர் அந்த பகுதியில் உள்ள சாலைகள் மற்றும் சந்துகள் வழியாக தெறித்து ஓடினர். சற்று சளைக்காமல் இணை ஆணையர் சிபிசக்கரவர்த்தி அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு ஏறி விரட்டிச் சென்று சுரேஷ் மற்றும் வினோத் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தார்.

சினிமா காட்சிகளை மிஞ்சும் விதமாக குற்றவாளிகளை இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி ஷேசிங் செய்து தட்டித் தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்