17- வது மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியின் சார்பாக மக்களவைக்கு குழுத் தலைவர்களை நியமித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கூடிய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்வி, மக்களவையில் குழு தலைவராக யார் செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரை மக்களவையின் குழு தலைவராக நியமிக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி 52 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியது.
![thirunavukarasar](http://image.nakkheeran.in/cdn/farfuture/0AkFy-A1sakxkmpLcp5CcK9D0YwVBASLoBIyO94xmmE/1559047528/sites/default/files/inline-images/thirunavu.jpeg)
இந்த எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இருந்து அதிக அளவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மக்களவையில் குழு தலைவரை தமிழகம், கேரள மாநிலங்களை சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் அல்லது தமிழகத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான திருநாவுக்கரசர் உள்ளிட்டோர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி பரிசீலித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.