பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு மீண்டும் இணையுமாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரை ஓரங்கட்டி, வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் அழைப்பு விடுத்திருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது, “நிதிஷ் குமார் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது. நிதிஷ் குமாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. அவர் தனது வாயில்களை திறக்க வேண்டும். இது இரு தரப்பு மக்களின் நடமாட்டத்தை எளிதாக்கும்” என்று கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.கவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக, நிதிஷ் குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது. அந்த கூட்டணியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜனதா தளம், தி.மு.க, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவைப் பெருக்கி வந்தனர். இதனிடையே நிதிஷ் குமார், இந்தியா கூட்டணியில் இருந்தும் பீகாரில் இருக்கும் மகா கூட்டணியிலிருந்தும் விலகி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். கடந்த 18 மாதங்களில் இரண்டாவது முறையாக அணி மாறியுள்ள நிதிஷ் குமார், தற்போது ஒன்பதாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.