மேற்கு வங்கத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா துர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு, உலகப் பாரம்பரிய அந்தஸ்த்தை வழங்கி யுனெஸ்கோ நேற்று (15.12.2021) சிறப்பு சேர்த்துள்ளது. யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு மேற்கு வங்க மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துர்கா பூஜைக்கு உலகப் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா, "வங்காளத்திற்குப் பெருமையான தருணம்! உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு வங்கத்தவருக்கும், துர்கா பூஜை ஒரு பண்டிகையைவிட மேலானது, அது அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு. இப்போது துர்கா பூஜை மனிதகுலத்தின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறோம்" என கூறியுள்ளார்.
அதேபோல் துர்கா பூஜைக்கு உலகப் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "(இது) ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய விஷயம்! துர்கா பூஜை நமது பாரம்பரியங்கள் மற்றும் நெறிமுறைகளில் சிறந்தவற்றை எடுத்துக்காட்டுகிறது. கொல்கத்தாவின் துர்கா பூஜை ஒவ்வொருவரும் கட்டாயம் பெற வேண்டிய அனுபவம்" என தெரிவித்துள்ளார்.