இந்திய வங்கிகளில் ரூபாய் 9,000 கோடி கடனை பெற்றுக்கொண்டு, கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பித்து சென்ற கிங்பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா மீதான வழக்கு விசாரணை, இன்று லண்டன் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அரசு சார்பில் விஜய் மல்லையாவை நாடுக் கடத்தக்கோரும் மனுவை லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
லண்டன் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான இன்றைய விசாரணையில் இந்திய அரசு மற்றும் விஜய் மல்லையா தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையைத் தொடர்ந்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் விரிவாக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.