ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா பதவியில் இருந்து விலகிய மூத்த தலைவர் புவனேஸ்வர் காலிட்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவர். கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை கொறடாவாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய புவனேஸ்வர் காலிட்டா, இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் பாஜக அலுவலகத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைவது தொடர்வதால், அக்கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.