மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 4- ஆம் தேதி பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவிக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து மாணவியின் தந்தை, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், இதற்கு காரணமான திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக உண்மைக் கண்டறியும் குழுவை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அமைத்து உத்தரவிட்டார். இது தொடர்பாக, பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐந்து பேர் கொண்ட இக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகை குஷ்பூ, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர் பேபி ராணி மௌரியா, மக்களவை உறுப்பினர் ரேகா வர்மா மற்றும் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீருபா மித்ரா சவுத்ரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.