
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க- சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் கடந்த கால ஆட்சியின் போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அந்த கூட்டணி சார்பில் மாநில முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸும் பொறுப்பு வகித்து இருந்தனர். சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து ஆட்சி அமைத்ததால், ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த சூழ்நிலையில், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான குணால் கம்ரா, சமீபத்தில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் காமெடி நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்வில், மாநிலத்தில் தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டேவை, அவர் துரோகி என்று கூறி காமெடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது சிவசேனா கட்சினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சி நடைபெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற சிவசேனா கட்சியினர் ஸ்டுடியோவையும், ஹோட்டலையும் அடித்து துவம்சம் செய்தனர். மேலும் அங்குள்ள சேர்கள், மேஜைகளை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள், குணால் கம்ரா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இருப்பினும் கோவம் குறையாத சிவசேனா கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்திலும், ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு காவல் நிலையங்களில் குணால் கம்ரா மீது புகார்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த புகார்கள் தொடர்பாக, காமெடியன் குணால் கம்ரா மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து, வரும் மார்ச் 31ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், தனக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி காமெடியன் குணால் கம்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தான், மும்பை போலீசாரால் கைது செய்யப்படுவேன் என்ற அச்சம் இருப்பதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணால் கம்ராவுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.