Skip to main content

'ஏன் பணமில்லையா அல்லது மனமில்லையா?'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி   

Published on 29/03/2025 | Edited on 29/03/2025
 'Why no money? No money or no mind?' - Chief Minister's question

100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியத்தை 17 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பானது வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் 319 ரூபாயிலிருந்து 336 ரூபாயாக உயர இருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், 'காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு!

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!' என தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) மூலம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் மார்ச் 29ஆம் தேதி ( 29.3.2025 - சனிக்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்