
இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 9 ஆம் நாளான இன்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால், தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இற்கிடையில் கடந்த 26 ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை வழங்கியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கனவே ஏற்றுக்கொண்டார். இந்தத் தீர்மானத்திற்கு திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இன்று காலை மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது ஆகஸ்ட் 8 ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெறும் விவாதத்துக்குப் பின், ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் மோடி பதில் அளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மக்களவைத் துணைத் தலைவரும் அசாம் மாநில முன்னாள் முதலமைச்சரும் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி கொண்டு வரவுள்ளார்.
முன்னதாக மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றால் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் என்பதாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகக் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.