கேரளா கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உட்பட 18 பேர் என, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.
இந்த விபத்தில் தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விமானி டி. வசந்த் சாதே, துணை விமானி, ஒரு குழந்தை உட்பட 18 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 190 பேர் பயணித்த விமானத்தில் 14 பேர் படுகாயமும், 127 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். 127 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானிகளுக்கு இடையே நடைபெற்ற உரையாடலை பதிவு செய்த கறுப்பு பெட்டியை கைப்பற்றி பதிவான தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனும் கோழிக்கோடு சென்றடைந்தார். விபத்துக்குள்ளான இடத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கறுப்பு பெட்டி கைப்பற்றப்பட்டதால் விமான விபத்து ஏற்பட்டதற்கான முழுமையான, உறுதியான காரணம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.