மாநிலத்தின் ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பு வகித்துவரும் நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான், சட்டத்தை திருத்தி நீங்களே பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என காட்டமாக கடிதம் எழுதியுள்ளார். பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சில நியமனங்கள் தொடர்பான விவகாரங்களை தனது கடிதத்தில் பட்டியலிட்டுள்ள கேரள ஆளுநர், பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியாக நியமனங்கள் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
சமீபகாலத்தில், பல்கலைக்கழகங்கள் தவறான காரணங்களுக்காக செய்திகளில் வந்துள்ளன. குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்ட பல்வேறு நியமனங்கள் தொடர்பாக செய்திகள் வந்துள்ளன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தராக நான் நிலைமையை வருத்தத்தோடு கவனித்துவந்தேன். ஆனால் சமீபத்திய சம்பவங்களும், விதிகள் மற்றும் நடைமுறைகளை முழுவதுமாக மீறி விஷயங்களைச் செய்ய எனக்கு அழுத்தம் கொடுக்கப்படும் விதமும் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதும், கல்வியாளர் அல்லாதவர்கள் கல்வி சார்ந்த முடிவுகளை எடுப்பதும் தற்போதைய நிலையாக இருந்துவருகிறது. இந்தசூழ்நிலையில், பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, நீங்கள் தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும். அதன்மூலம் உங்கள் அரசியல் நோக்கங்களை ஆளுநரைச் சார்ந்திருக்காமல் நிறைவேற்றலாம் என்பதே உங்களுக்கு எனது ஆலோசனை. பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு, அரசியல் தலையீடு தொடர்பான குற்றச்சாட்டுகளை யாரும் முன்வைக்க வாய்ப்பில்லை.
சட்டசபை கூட்டத் தொடரில் தற்போது நடைபெறாத நிலையில், முதல்வர் (வேந்தர் பதவியை ஏற்க) அவசரச் சட்டத்தை தேர்வு செய்யலாம். நான் அதில் உடனடியாக கையெழுத்திடுவேன் என உறுதியளிக்கிறேன். இதற்கு மாற்றாக வேந்தரின் அதிகாரங்களை ஆளுநர், முதல்வருக்கு மாற்றக்கூடிய சட்டப்பூர்வ ஆவணத்தைத் தயாரிக்குமாறும் நீங்கள் அட்வகேட் ஜெனரலிடம் கூறலாம். இதற்கு சட்டப்பூர்வ வழியைக் கண்டுபிடிப்பது அட்வகேட் ஜெனரலுக்கு கடினமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். வேந்தரான என்னால் பல்கலைக்கழகங்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றதாகிவிட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.