கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமசேரி பகுதியில் நேற்று ஜெகோபா வழிபாட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது காலை 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது. இதனைக் கண்டு பிரார்த்தனை செய்தவர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். குண்டு வெடித்த இடத்தில் தீப்பற்றி எறிந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்ட விசாரணையில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்திருந்தனர். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து களமச்சேரி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல் நிலையத்தில் டொமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்தார். விசாரணையில் டொமினிக் மார்ட்டின் டிபன் பாக்ஸில் வெடிகுண்டை மறைத்து எடுத்து வந்து ரிமோட் மூலம் இயக்கி வெடிகுண்டை வெடிக்க வைத்தது உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு வைப்பதற்காக இணையதளத்தில் ஆறு மாதங்களாகத் தேடித்தேடி தகவல்களைத் திரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது. 16 ஆண்டுகள் உறுப்பினராக இருந்ததாகவும் சபை செயல்பாடு பிடிக்காததால் குண்டு வைத்ததாகவும் டொமினிக் மார்ட்டின் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்தச் சூழலில், 90 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவை சேர்ந்த குமாரி (வயது 53) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்திருந்தது. இந்நிலையில் குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனையடுத்து கேரளா குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசனை நடத்த கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.