modi amitshah

சிபிஐயில் சிறப்பு இயக்குநராக இருந்துவந்தவர் ராகேஷ் அஸ்தானா. இவருக்கும் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் சிபிஐயிலிருந்து மாற்றப்பட்டனர்.

Advertisment

ராகேஷ் அஸ்தானா, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில்சில தினங்களுக்கு முன்பு, அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில், டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மேலும், அவருக்கு ஒரு வருட பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெல்லி அரசு ராகேஷ் அஸ்தானாவின் நியமனத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Advertisment

இந்தநிலையில்,வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர்ராகேஷ் அஸ்தானா டெல்லி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எம்.எல். ஷர்மா தனது மனுவில், யூபிஎஸ்சி, முடிந்தவரை இரண்டு வருட பதவிக்காலம் மீதமிருக்கும் அதிகாரிகளைத்தான் உயர்பொறுப்புக்குப் (ஆணையர் போன்ற பதவிகளுக்கு) பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை வரும் ஐந்தாம் தேதியன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.