கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது
இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.