இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து 9 ஆம் நாளான நேற்று வரை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவுவதால், தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் நாட்டின் கடன் சுமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பதிலளிக்கையில், “மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. அதாவது நடப்பாண்டு மார்ச் வரையில் மத்திய அரசுக்கு 155.6 லட்சம் கோடியாக கடன் உள்ளது. இது கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.1 சதவீதம் ஆகும். மாநில அரசுகளின் கடன் மொத்த உற்பத்தியில் சுமார் 28 சதவீதம் ஆகும்.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் மூலதன செலவாகவும், முதலீட்டுக்காகவும் 84 ஆயிரத்து 883 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் இதுவரை 29 ஆயிரத்து 517 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 2020 - 21 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் மூலதன செலவினம் 2.15 சதவீதமாக இருந்தது. அதே சமயம் 2023 - 23 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் மூலதன செலவினம் 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.