டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மொத்தம் 70 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட டெல்லியில், 36 இடங்களை பெற்றிருந்தால் பெருபான்மை ஆட்சியை பிடிக்கலாம்.
சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இதுவரையில் அறிவிக்கப்படாத நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளில் இருந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த 6 பேர் இடம்பெற்றுள்ளது.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி 2015 ஆம் ஆண்டு முதல் 2024 வரை தொடர்ந்து 10 ஆண்டு கால வரை ஆட்சி பொறுப்பு வகித்து வருகிறது. இதில், 2015ஆம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். அதனை தொடர்ந்து, அங்கு அதிஷி முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அதிகபெருபான்மையாக 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.