உத்தரப்பிரதேசத்தில் நீண்ட கால அரசியல் எதிரிகளாக இருந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் , மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து 17-வது மக்களவை தேர்தலை சந்தித்து வருகின்றனர். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்று தீர்மானிப்பது உத்தரபிரதேச மக்கள் ஆவர். ஏனெனில் மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் உத்தரப்பிரதேச மாநிலம் சுமார் 80 மக்களவை தொகுதிகளைக் கொண்டது. இந்த மாநிலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றி யாருக்கு ஆதரவு என்று கூறுகிறதோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளரே வெற்றி பெறுவார்.
குறிப்பாக கடந்த 2014- ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் சுமார் 72 மக்களவை தொகுதிகளை பாஜக கைப்பற்றியதால் தான் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உத்தரப்பிரதேச சமாஜ்வாதி கட்சி தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்தியாவின் அடுத்த பிரதமர் உத்தரப்பிரதேஷ மாநிலத்தில் இருந்து வரவேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். மேலும் எனக்கு பிரதமர் ஆக வேண்டும் என ஆசை இல்லை என்று கூறியுள்ளார். உத்தரப்பிரதேச முடிவுகள் குறித்து பேசிய அகிலேஷ் யாதவ் நாங்கள் எத்தனை மக்களவை தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று கூற முடியாது. ஆனால் பாஜக கூட்டணி ஒற்றை இலக்கில் தான் தொகுதிகளை கைப்பற்றும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாயாவதி , அகிலேஷ் கூட்டணி காங்கிரஸ் கட்சியின் சொந்த மற்றும் பரம்பரைத் தொகுதியாக கருதப்படும் அமேதி மற்றும் ரேபரேலி மக்களவை தொகுதியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுப்பதாகவும் , ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சிக்கே இடமில்லை என மாயாவதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் பிரிந்திருந்ததால் தான் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்நிலையில் தான் இருவரும் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுத்து தேர்தலை சந்தித்து வருகின்றனர். இருப்பின்னும் இருகட்சிகளின் செல்வாக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் சிறப்பாக உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு கட்ட தேர்தல்களே மீதம் உள்ளது . இந்த தேர்தல் முடிவடைந்ததும் மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.