கால்பந்தாட்ட வீரர் மரடோனா மறைவிற்குக் கேரளாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.
உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த மரடோனாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் சிகிச்சையிலிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார். 60 வயதான மரடோனாவின் இறப்பு, உலகம் முழுவதுமுள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மரடோனா மறைவிற்குக் கேரளாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன் வெளியிட்டுள்ள குறிப்பில், "மரடோனாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலும், லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர் மறைவை நம்பமுடியாத நிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், இன்று முதல் இரண்டு நாள் துக்கத்தை அனுசரிக்க மாநில விளையாட்டுத் துறை முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக மரடோனா கேரளா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.