குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காக ஆற்றைக் கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. தேடுதல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மோர்பி தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பியான மோகன்பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
மேலும் விபத்து குறித்து தன் வருத்தங்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, “நான் ஏக்தா நகரில் உள்ளேன். ஆனால் என் மனம் மோர்பி பாலத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைத்துக்கொண்டு உள்ளது. என் வாழ்க்கையில் இதுபோன்ற வலியை நான் அனுபவித்ததில்லை. ஒரு புறம் இதயம் முழுவதும் வலி நிறைந்துள்ளது. மறுபுறம் கடமையைச் செய்வதற்கானப் பாதை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் பாதுகாக்கவும் எவ்வித அலட்சியமும் காட்டப்படமாட்டாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” எனக் கூறினார்.
விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் நேரில் சென்று காயம் அடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.
இந்நிலையில் மோடி செல்ல இருக்கும் மருத்துவமனையைப் புதுப்பிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. சுவர்களுக்கு வர்ணம் பூசுவது, பழுதடைந்த பொருட்களைச் சரி செய்வது, தளங்களைச் சுத்தம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளும் இரவிலிருந்து அங்கு அசுர வேகத்தில் நடந்து வருகிறது.
அவர்கள் பணி செய்யும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. மருத்துவமனை புதுப்பிக்கப்படுவதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், “விபத்தில் எண்ணற்ற மக்கள் உயிரிழந்து மாநிலமே சோகத்தில் இருக்கிறது. இவர்களோ ஏதோ விழாவிற்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். வெட்கக்கேடு” என விமர்சித்துள்ளனர்.